×

பாலாற்று பகுதியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுப்பேன்: மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா வாக்குறுதி

மதுராந்தகம்: திமுக கூட்டணி கட்சியான மதிமுக கட்சியில் சார்பில் போட்டியிடும் மல்லை சத்தியா நேற்று காலை மதுராந்தகம் பஜார் பகுதியில் நடை பயணம் சென்று சுமைதூக்கும் தொழிலாளர்களை சந்தித்து அவர்களின்  குறைகளைக் கேட்டறிந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அனைவரும்  உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து பஜார் பகுதியில் உள்ள வணிகர்களை அவர்களது கடைகளுக்கு சென்று வியாபாரிகளிடமும் கடை தொழிலாளர்களிடமும் குறைகளை கேட்டறிந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 மல்லை சத்யா வியாபாரிகளிடம் பேசுகையில், மதுராந்தகத்தில் உள்ள அரசினர் மருத்துவமனை போதிய வசதிகள் இன்றி செயல்படுகிறது. நவீன வசதிகளை செய்து தந்து அந்த மருத்துவமனையின் தரத்தை உயர்த்த பாடுபடுவேன்.  இந்த  பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரியை கிராமப்புற மாணவ மாணவிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில்  கொண்டுவருவேன், வாக்கு சேகரிக்க சென்ற போது விளையாட்டு வீரர்கள் நல்ல வழியில் வருவதற்கான உள் விளையாட்டு  அரங்கை ஏற்படுத்தித் தரவேண்டும் என கோரிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற பாடுபடுவேன், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய பகுதியில் மதுராந்தகம் நகரம் அமைந்துள்ளதால் மதுராந்தகம்  தெற்கு பைபாஸ் சாலைப் பகுதியை கடந்து நகரத்திற்கு வந்து செல்ல மேம் பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். இந்த தொகுதியில் உள்ள பாலாற்று பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வேலை  வாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்களுக்கு தொழில் பேட்டை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு  பேசினார்.
 இந்த நிகழ்ச்சியில் மதிமுக  கட்சியின் மாவட்ட செயலாளர் வளையாபதி, மாவட்ட பொருளாளர் சங்கரன், திமுக நகர செயலாளர் கே.குமார் மதிமுக கட்சி நகர செயலாளர் ராஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Madimuga ,Mallai Satya , I will take action to build a barricade in the milky way: Madimuga candidate Mallai Satya promises
× RELATED மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு...